இலங்கையின் அபிவிருத்திக்காக அமெரிக்கா 720 கோடி ரூபா உதவி

இலங்கையின் அபிவிருத்திக்காக 720 கோடி ரூபாவை வழங்க ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி முகவர் நிலையம் முன்வந்துள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அந்த நிறுவனத்தின் ஆசிய அலுவலகத்தின் உதவி நிர்வாகி மைக்கல் ஷிஃபர் நிதியமைச்சில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது இதனைத் தெரிவித்தார்.

நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, இலங்கை மற்றும் மாலைத்தீவுகளின் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் நிறுவனத்தின் பணிப்பாளர் கெப்ரியல் கிராவ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அபிவிருத்தி நோக்கத்திற்காக இலங்கைக்கும், குறித்த நிறுவனத்திற்கும் இடையிலான ஒப்பந்தத்தின்படி வழங்கப்படும் நிதி, இலங்கை சந்தையை அடிப்படையாகக் கொண்ட அபிவிருத்தியை வலுப்படுத்த பயன்படுத்தப்படும்.

அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள், சிவில் சமூகங்களுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட கூட்டாண்மையின் விளைவாக இலங்கையர்களின் வாழ்வில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்தும் கூட்டு முயற்சிகளுக்கு இந்த நிதிகள் துணைபுரியும் என இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்த மேலதிக நிதியின் மூலம் பொருளாதார வளர்ச்சி மற்றும் நல்லாட்சிக்கான அமெரிக்க மக்களின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வலியுறுத்துவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்க் தெரிவித்துள்ளார்.

1956ஆம் ஆண்டு முதல் இலங்கை மக்களுக்காக அமெரிக்கா முதலீடு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )