
மக்கள் அரசியல்வாதிகளின் பின்னால் சென்ற யுகம் நிறைவுக்கு கொண்டு வரப்படும்.
மக்கள் அரசியல்வாதிகளின் பின்னால் சென்ற யுகம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டு, அனைத்து இனத்தவர்களுக்கும் சட்டத்தை சமமாக நிலைநாட்டக்கூடிய நாட்டைக் கட்டியெழுப்பப் போவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த முயற்சியில் முட்டுக்கட்டையாகக் கூடிய சட்டங்கள் இருந்தாலும், மக்கள் நலன்கருதி அவற்றை திருத்தப் போவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
நான் இலங்கையர் என்று பெருமையுடன் கூறக்கூடிய பின்னணியை நாட்டு மக்களுக்காக ஏற்படுத்தப் போவதாகவும் அவர் கூறினார்.
திருகோணமலையில் நேற்று இடம்பெற்ற மக்கள் கூட்டமொன்றில் கலந்து கொண்டு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உரையாற்றினார்.
சகல மக்களுக்கும் ஆசீர்வாதமாக அமையக்கூடிய நாட்டைக் கட்டியெழுப்பும் ஆற்றல் தேசிய மக்கள் சக்திக்கே உண்டு. திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை, கனிய மணல் படிமத்தை மீண்டும் பயன்படுத்தி பெறுமதிசேர் கைத்தொழிலாக மாற்றுவது தமது திட்டமென ஜனாதிபதி குறிப்பிட்டார்.
துருப்பிடித்துவரும் எண்ணெய்த் தாங்கிகளை மீளமைத்து, தேசிய பொருளாதாரத்திற்கு வலுவைப் பெற்றுத்தரக்கூடிய நிலையை ஏற்படுத்த வேண்டும்.
எண்ணெய்க் குதங்கள் சார்ந்து சுத்திகரிப்பு நிலையமொன்றை அமைக்கக்கூடிய சாத்தியம் பற்றியும் ஆராயப் போவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
கடற்றொழில் துறையை பயனுறுதிமிக்கதாக மாற்றுவதற்கு எரிபொருள் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதை அவர் நினைவுகூர்ந்தார்.
