
தேர்தல் பிரசார நடவடிக்கை எதிர்வரும் 18ஆம் திகதி நிறைவு.
ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்கு 12 நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான், மாலைத்தீவுகள் போன்ற நாடுகளின் பிரதிநிதிகள் இதில் அடங்குவர். ஜனாதிபதி தேர்தல் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளையும் கண்காணித்த பின்னர் இவர்கள் அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவுள்ளனர்.
அதன்படி, ஐரோப்பிய ஒன்றியம், பொதுநலவாய அமைப்பு கண்காணிப்பாளர்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். தெற்காசிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் குழுவொன்று வரவுள்ளது.
அந்த அமைப்பு விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க தேர்தலை கண்காணிக்க அனுமதி வழங்கப்பட்டதாக ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலை சுதந்திரமாகவும், நீதியாகவும் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன்ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலின் தபால்மூல வாக்குப் பதிவுகள் எதிர்வரும் 4ஆம், 5ஆம், 6ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. அதற்கு தேவையான அனைத்து ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன.
தபால்மூல வாக்காளர்கள் இயன்றவரை தங்களுக்காக ஒதுக்கப்பட்ட திகதிகளில் வாக்களிக்குமாறு அவர் கேட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கை எதிர்வரும் 18ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைகிறது.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து கட்சிகளினதும் தேர்தல் பிரசார அலுவலகங்களை எதிர்வரும் 22ஆம் திகதி வரை மாத்திரமே பராமரிக்க முடியும் என தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அசங்க கரவிட்ட தெரிவித்துள்ளார்.
தேர்தல் அலுவலகங்களை சட்டவிரோதமாக முன்னெடுத்துச் செல்வதற்கு இடமில்லை. ஜனாதிபதி தேர்தல் கடமைகளுக்காக 54 ஆயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படுவதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத தேர்தல் பிரசார நடவடிக்கைகளை தடுப்பதற்காக நாடு தழுவிய ரீதியிலான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சட்டவிரோத தேர்தல் சுவரொட்டிகள், கட்அவுட்களை அகற்றுவதற்காக ஆயிரத்து 500 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலின் போது ஊடகங்களுக்கு பாரிய அளவிலான பொறுப்பு உள்ளதாக இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மதுபாஷினி ஹேவகே சுட்டிக்காட்டியுள்ளார்.
எமது நிலையத்தில் இன்று இடம்பெற்ற சுபாரதி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.