உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் ஆரம்பம்.
பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் இன்று ஆரம்பமாகியுள்ளதாக பிரதி தபால் மாஅதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினமாக அடுத்த மாதம் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றை அடுத்த மாதம் 7ஆம் திகதிக்கு முன்னர் பகிர்ந்தளிப்பது இலக்காகும். அதன் பின்னர், உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்கள் தாங்கள் பதிவு செய்த பகுதியில் உள்ள தபால் நிலையத்திற்குச் சென்று அடையாளத்தை உறுதிப்படுத்துவதன் மூலம் அவற்றை பெற்றுக்கொள்ளலாம்.
இதேவேளை, பொதுத் தேர்தலில் தபால் மூல தேர்தல் எதிர்வரும் புதன்கிழமை மற்றும் அடுத்த மாதம் 4ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
மாவட்ட செயலக வளாகத்தில் அமைந்துள்ள அனைத்து அலுவலகங்கள், தேர்தல் அலுவலகங்கள், பொலிஸ் நிலையங்கள் மற்றும் பொலிஸ் தொடர்பான அலுவலகங்களில் உள்ள தபால்மூல வாக்காளர்களுக்கு தங்களின் தபால்மூல வாக்குகளை அளிப்பதற்காக எதிர்வரும் 30ஆம் திகதியும், அடுத்த மாதம் 4ஆம் திகதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஏனைய அரச நிறுவனங்கள் மற்றும் இராணுவ முகாம்களில் உள்ள தபால்மூல வாக்காளர்கள் அடுத்த மாதம் முதலாம், 4ஆம் திகதிகளில் வாக்களிக்க உள்ளனர்.
அன்றைய தினங்களில் தபால் வாக்களிக்க முடியாதவர்கள் அடுத்த மாதம் 7ஆம், 8ஆம் திகதிகளில் தங்களின் பணியிடங்கள் அமைந்துள்ள மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் தபால் வாக்குகளை பதிவு செய்ய முடியும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு ஏழு லட்சத்து 38 ஆயிரத்து 50 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
இது ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களித்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.