
NPP பொருளாதார கொள்கைகள் பற்றி விளக்கம் கோரப்பட்டுள்ளது.
நாட்டில் மீண்டும் வரிசையுடன் கூடிய யுகத்தை ஏற்படுத்தும் அனுர குமார திஸாநாயக்காவின் பொருளாதாரக் கொள்கைகள் பற்றி தாம் அவரிடம் விளக்கம் கோரியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மூன்று நாட்கள் கடந்தும் அதற்கான உரிய பதில்கள் அவரிடமிருந்து கிடைக்கவில்லை. பொருளாதாரக் கொள்கையற்ற தேசிய மக்கள் சக்தியிடம் தமது எதிர்காலத்தை ஒப்படைப்பதா? என்பது பற்றி இளைஞர் சமூகமே தீர்மானிக்க வேண்டுமென்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
புத்தளம் நகரில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு அவர் இது பற்றி கருத்து வெளியிட்டார். மக்களின் வாழ்க்கைச் சுமையை அதிகரிக்கத் தயாராகும் குழுவினரிடம் ஆட்சிப் பொறுப்பை வழங்கக்கூடாது என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
இலங்கையின் அந்நியச் செலாவணி ஒதுக்கம் தற்சமயம் வலுவடைந்துள்ளமையினால் மோட்டார் வாகன உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கிகாரமளித்திருக்கிறது.
தேசிய மக்கள் சக்தி தயாரித்துள்ள வரவு செலவுத் திட்டம் சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாடுகளுடன் முரண்படுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இதன் மூலம் 40 ஆயிரம் கோடி ரூபாவிற்கும் அதிகமான துண்டுவிழும் தொகை ஏற்படும் என்றும் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்தார். மொத்த தேசிய உற்பத்தியின் மூலம் 10 ஆயிரம் கோடி ரூபாவை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியும்.
இதில் 30 ஆயிரம் கோடி ரூபா அதிகரிக்கும் போது சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் மீறப்படுமென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
பணம் கடனாகப் பெற்றுக்கொள்ளப்படும் போது ரூபாவின் பெறுமதி குறைவடையும் என்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டோடு செயற்படுவதன் மூலம் ரூபாவின் பெறுமதியை பாதுகாக்க முடியும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.
