இஸ்ரேலுடனான மோதல் விவகாரத்தில் தலையிடக்கூடாது – ஈரான்

ஈரான், இஸ்ரேல் மோதல் விவகாரத்தில் தலையிடக்கூடாது என ஈரான் அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் இருந்து விலகியிருக்குமாறு ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். ஸ்சுவீடன் தூதரகத்தின் ஊடாக இந்தத் தகவலை ஈரான் பகிர்ந்துள்ளது.

ஈரான் நேற்று இஸ்ரேல் மீது மேற்கொண்ட தாக்குதலினால் இஸ்ரேலில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பலம் மிக்க ஆகாய பாதுகாப்பு கட்டமைப்பு இஸ்ரேல் வசம் உள்ளபோதும், ஈரானின் 80 வீதமான ஏவுகணைத் தாக்குதலை இஸ்ரேலால் தடுத்து நிறுத்த முடியாது போயுள்ளது.

இவ்வாறான நிலையில் ஈரானுக்கு எதிராக தாக்குதலை முன்னெடுப்பதற்கு இஸ்ரேல் தயாராகி வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரஸ் தமது நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கு இஸ்ரேல் தடை விதித்துள்ளது. ஈரான், இஸ்ரேல் மீது மேற்கொண்ட தாக்குதலுக்கு குட்டரஸ் கண்டனம் தெரிவிக்கவில்லை என்று இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சுத் தெரிவித்துள்ளது.

தெற்கு லெபனானில் உள்ள இரண்டு கிராமங்களில் வசிக்கும் மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் இராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளுக்காகவே பொதுமக்களை வெளியேற்றுவதாகவும் இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

காசாவில் மக்கள் தங்கியிருக்கும் குடியிருப்புப் பகுதிகளில் இஸ்ரேல் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அதிகளவானோர் கொல்லப்படுகின்றனர்.

குண்டு வீச்சுத் தாக்குதலுக்குப் பின்னர் மருத்துவப் பணியாளர்களை குறித்த பகுதிகளுக்குள் செல்லவிடாது இஸ்ரேல் இராணுவம் தடுத்து நிறுத்துவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு காசாவில் மனிதநேயப் பணியில் ஈடுபட்டு வந்த நிறுவனம் ஒன்றின் பணியாளர்கள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ஐந்து தொண்டர்கள் உயிரிழந்துள்ளனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )