யாழ் கங்கை வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கப் போவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அடுத்த தசாப்தத்திற்குள் வடக்கை அபிவிருத்தி அடைந்த மாகாணமாக மாற்றுவது தமது நோக்கமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் ஆகியுள்ளன. இப்போது, சகலரும் ஒன்றிணைந்து அபிவிருத்தியை அர்த்தப்படுத்தும் போரைத் தொடங்க வேண்டியுள்ளதென ஜனாதிபதி குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் – கிளிநொச்சி நீர் வழங்கல் திட்டத்தின் தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.

யாழ்ப்பாணத்தில் நீர் வழங்கல் திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும். யாழ் – கிளிநொச்சி நீர் வழங்கல் திட்டம் மற்றும் யாழ் கங்கை திட்டங்கள் மூலம் வடக்கின் குடிநீர் தேவைக்கு முழுமையான தீர்வுகளை வழங்க முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.

தாளையடியில் அமைக்கப்பட்டுள்ள கடல் நீரை நன்னீராக மாற்றும் நிலையமானது, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. இதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவி வழங்கப்பட்டது.

யாழ் மற்;றும் கிளிநொச்சி மக்களின் குடிநீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, இலங்கை அரசாங்கம், 2011 ஆம் ஆண்டில் கிளிநொச்சி மாவட்ட நீர் வழங்கல் மற்றும் சுகாதாரத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் 60,000 இணைப்புக்கள் வழங்கப்படவுள்ளன.

இவ்விரு மாவட்டங்களிலும் மூன்று இலட்சம் பேருக்கு சுத்தமான, பாதுகாப்பான குடிநீர் வழங்குவதும் 80,000 பேருக்கு சுகாதார வசதிகளை மேம்படுத்துவதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

உவர் நீரை நன்னீராக மாற்றும் நிலையத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் 2017 ஆம் ஆண்டு கைசாத்திடப்பட்டது. இதற்குரிய மொத்தச் செலவு 266 மில்லியன் டொலராகும். யாழ்ப்பாணம்-கிளிநொச்சி நீர் வழங்கல் மற்றும் சுகாதார பாதுகாப்புத் திட்டம் 2025 ஆம் ஆண்டின் இடைப்பகுதியில் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )