ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் – தேர்தல் ஆணையாளர் நாயகம்

ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் 21ஆம் திகதி தேர்தல் நடைபெறும். இது தொடர்பான முதற்கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. வாக்குச் சீட்டுகள் நாளை தபால் திணைக்களத்திற்கு வழங்கப்படவுள்ளன. அவை மாவட்ட தேர்தல் பொறுப்பு அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு எதிர்வரும் 4ஆம், 5ஆம், 6ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அன்றைய தினத்தில் வாக்களிக்க முடியாத அரச உத்தியோகத்தர்கள் அடுத்த மாதம் 11ஆம், 12ஆம் திகதிகளில் மாவட்ட செயலக அலுவலகங்களில் வாக்குகளை பதிவு செய்யலாம். இம்முறை ஏழு லட்சத்து 12 ஆயிரத்து 319 அரச ஊழியர்கள் தபால்மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

தபால்மூல வாக்கு சீட்டுகளை பாதுகாப்பாக கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால் மாஅதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார். இதற்காக விசேட பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

இதேவேளை, உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் எதிர்வரும் புதன்கிழமை இடம்பெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )