தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான ஏற்பாடுகள் பூர்த்தி.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனைத்து மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் இன்று நள்ளிரவு முதல் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான மாதிரி வினாக்கள் அடங்கிய வினாத்தாள்களை அச்சடித்து விநியோகிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டார்.

அத்தோடு, பரீட்சை வினாத்தாள்களுக்கான வினாக்களை வழங்குவதாகவோ அல்லது அதற்கு சமமான வினாக்கள் வழங்கப்படும் என சுவரொட்டிகள், பதாகைகள், கையேடுகள், மின்னணு, அச்சிடப்பட்ட அல்லது சமூக ஊடகங்களில் வெளியிடுவது முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.

எந்தவொரு நபரோ, நிறுவனமோ அல்லது தரப்பினரோ இந்த உத்தரவை மீறினால் அருகில் உள்ள பொலிஸ் நிலையம், பொலிஸ் தலைமையகம் அல்லது பரீட்சை திணைக்களத்தில் முறைப்பாடு செய்ய முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

2024ஆம் ஆண்டிற்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை நடைபெறவுள்ளது.

நாடளாவிய ரீதியில் இரண்டாயிரத்து 849 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளது. இம்முறை பரீட்சைக்கு மூன்று இலட்சத்து 23 ஆயிரத்து 809 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்.

விசேட தேவையுடைய மாணவர்களுக்கு விசேட பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 491 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அனர்த்த நிலைமைகள் தொடர்பில் கவனம் செலுத்தி தேவையான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )