JVP யினால் கல்வித்துறையில் 10 வருடகால பின்னடைவு – ஜனாதிபதி

JVP யினால் கல்வித்துறையில் 10 வருடகால பின்னடைவு – ஜனாதிபதி

 

மக்கள் விடுதலை முன்னணியின் கடந்தகால செயற்பாடுகளினால் இலங்கையின் கல்வித்துறையில் 10 வருடகால பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு பாடசாலை மாணவர்களுக்கும் ஆங்கிலக் கல்வியை வழங்க தாம் வெள்ளை அறிக்கையை கொண்டு வந்த போது, மக்கள் விடுதலை முன்னணியின் எதிர்ப்பினால் இலங்கையில் பெருமளவிலான இளைஞர்கள் ஆங்கிலக் கல்வியை இழந்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

துணைவேந்தர்களையும் விரிவுரையாளர்களையும் கொலை செய்யும் நடவடிக்கைகளிலும் மக்கள் விடுதலை முன்னணி ஈடுபட்டதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். டி.எஸ்.சேனநாயக்க, ஜே. ஆர். ஜயவர்தன போன்ற தலைவர்கள் நாட்டின் கல்வி அபிவிருத்திக்காக தம்மை அர்ப்பணித்தமையையும் ஜனாதிபதி நினைவு கூர்ந்தார்.

கல்வியின் வளர்ச்சிக்காக பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தற்போது நாட்டிலுள்ள 17 பல்கலைக்கழங்களில் ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக ஜனாதிபதி குறிப்பி;ட்டார். அனைவருக்கும் ஆங்கிலம் வேலைத்திட்டத்தின் கீழ் அனைவருக்கும் ஆங்கில அறிவைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இதேவேளை, உலகின் முக்கிய சுற்றுலாத் தலமாகவும் மட்டக்களப்பு அபிவிருத்தி செய்யப்பட்டு வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு, கல்குடாவில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
வாகரை முதல் காத்தான்குடி வரை பாரிய சுற்றுலா வலயமொன்று உருவாக்கப்படும் என தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியின் போது தீர்வினை வழங்காது ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் தப்பியோடினர். இவர்கள் குறித்து மக்கள் புத்தசாலித்தனமாக சிந்தித்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

அதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த தலதா அத்துகோரல எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார். அதன்படி வெலிமடை நகரில் ஜனாதிபதிக்கு ஆதரவான பிரச்சார மேடையில் கலந்து கொண்டு தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )